முன்னுரை: வாழ்வும் அழிவும்
இந்தியாவில் நவீனத்துவமும் அச்சு ஊடகங்களும் வருவதற்கு முன் இங்கு புழக்கத்திலிருந்த பல கதையாடல் முறைகளில் தலபுராணம் ஒரு தனிப்பட்ட அந்தஸ்தைப் பெற்றிருந்த்து. தலபுராணம் பெரும்பாலும் ஏதோவொரு கோயில் தொடர்பாகவும் அந்த கோயில் அங்கு எப்படி உருவாகியது என்பதைச் சொல்வதாகவும் இருக்கும். தலபுராணங்களில் ராஜாக்களும் ராணிகளும் முனிவர்களும் முக்கிய பாத்திரங்களில் காணப்படுவர். கதையின் உச்ச தருணத்தில் அக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் கடவுள் தோற்றமளித்து தன் தெய்வீக சக்தியின் மூலம் ஏதோ ஒரு நெருக்கடியைத் தீர்த்துவைப்பார். அதிசயங்கள் நிகழாத தலபுராணம் அரிதினும் அரிது. நம் நாட்டில் நவீன நாவல் வடிவம் தோன்றிய காலகட்டத்தில் தலபுராணம், கதை சொல்வதற்கான ஒரு தயார்நிலை வடிவமாக நம் எழுத்தாளர்களுக்கு கிடைத்த்து. அந்த வடிவம், நிலப்பரப்பாலும், மரபாலும், வாழ்முறையாலும், ஏன் உணர்வு நிலைகளாலும் வரையறுக்கப்பட்ட ஒரு மக்கட்குழுவின் வாழ்க்கையை ஒட்டி புனையக்கூடியதாகவும் பல கிளைக்கதைகளை உள்ளடக்கும் வசதி படைத்தாகவும் இருந்தது.
நாவல் வடிவம் நன்றாக உருவாகியிருந்த அமெரிக்காவில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பத்தாண்டுகளில் தலபுராண வடிவம் சிறப்பாகவே கையாளப்பட்டது. மக்களாட்சியைப் பற்றி ஒயாத பெருமை பேசும் அமெரிக்காவில் சராசரி எளிய மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் சிற்றூர் கதையாடல்கள் பெருத்த வரவேற்பைப் பெற்றன. சிற்றூர் வாழ்க்கைமீது அமெரிக்க வாசகர்களுக்கான ஈர்ப்புக்குச் சான்றாக ஷெர்வுட் ஆண்டர்சன் (Sherwood Anderson)-இன் வைன்ஸ்பர்க், ஒஹையோ (1916); சின்க்ளேர் லூயிஸ் (Sinclair Lewis)-இன் மெயின் ஸ்ட்ரீட் (1920); ஆக்ஸ்ஃபோர்ட், மிஸ்ஸிசிப்பியைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட வில்லியம் ஃபாக்னர் (William Faulkner)-இன் பல நாவல்கள், காரிஸன் கெல்லர் (Garrison Keller) எழுதிய லேக் வோபிகான் டேஸ் (1985) போன்ற பல புகழ்பெற்ற படைப்புகளைச் சுட்டலாம். அதிசயங்களால் நம்மைப் பரவசத்திலாழ்த்தும்படி லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் காப்ரியர் கார்சியா மார்க்வெஸ் (Gabriel Garcia Marquez) தம் படைப்புகளினூடாக உருவாக்கிய கற்பனை ஊரான மகோண்டோவையும் இங்கே நினைவு கூறலாம்.
இருபதாம் நூற்றாண்டு இந்திய இலக்கியத்திலும் சிற்றூர் கதைகளுக்குப் பஞ்சமில்லை. ஆங்கில இலக்கியத்தில் ஆர்கே நாராயண் முழுக்க முழுக்கத் தன் கற்பனையின் மூலம் கட்டியெழுப்பிய மால்குடி நாமனைவரும் அறிந்ததே. மலையாள இலக்கியத்தின் மேதைகளில் ஒருவரான ஓவி விஜயனின் கசக்கிண்ட இதிஹாசம் (1969) காலத்தை வென்ற படைப்பு. மற்றுமொரு முன்னோடி ஆங்கில எழுத்தாளர் ராஜா ராவ் எழுதிய காந்தபுரா (1938) இந்த வரிசையில் முதன்மையானது என்றுதான் சொல்லவேண்டும். இருந்தாலும் சென்ற நூற்றாண்டின் முதற்பாதியில் ஒரு ஊரையோ இடத்தையோ சுற்றி படைக்கப்பட்ட இந்திய நாவல்கள் எண்ணிக்கையில் குறைவாகவே இருந்தன. என்றோ கடந்து போன காலங்களை கற்பனையின் மூலமாக மீட்டுருவாக்கும் செய்யும் வரலாற்றுக் கதைகள் ஒருபுறமிருக்க, தனிமனிதனுக்கு ஏற்படக்கூடிய அறம் மற்றும் இருத்தலியல் சார்ந்த பிரச்சினைகளே தமிழ் புனைகதைகளில் பெரும்பாலும் பேசப்பட்டன. பின்னாட்களில் படைப்பாளிகள் வர்க்க முரண்களையும் சாதிய ஒடுக்குமுறையையும் கதைப்பொருளாகக் கையாளத் தலைப்பட்டனர்.
இந்த சூழலில்தான் சுந்தர ராமசாமியின் முதல் நாவல் ஒரு புளியமரத்தின் கதை (1966) தமிழகத்தின் சிற்றூர் ஒன்றின் முச்சந்தியின் நடுவில் உயர்ந்து நின்ற புளியமரத்தின் வரலாறைச் சித்தரிப்பதாக தல புராண வடிவத்தில் வெளிவந்தது. அதே ஆண்டில் வெளிவந்த கிருத்திகாவின் வாசவேச்வரம் (1966) ஒரு கற்பனை ஊரைப் பற்றியும் அவ்வூரில் வாழும் மக்களின் பாலியல் சார்ந்த பிறழ்வுகளையும் பாசாங்குகளையும் பதிவு செய்த்து. நீல. பத்மநாபனின் புகழ்பெற்ற பள்ளிகொண்டபுரம் (1970), கைவிடப்பட்ட கதைநாயகனின் அகத் துயரங்களை அனந்த பத்மநாபஸ்வாமி பள்ளிகொண்டிருக்கும் திருவனந்தபுரம் என்ற நகரத்தின் பொருண்மை எதார்தத்த்தினூடே வெளிப்படுத்தியது.
வெகுவாக கொண்டாடப்பட்ட இந்த இரண்டு நாவல்களை விடவும், சுரா-வின் ஒரு புளியமரத்தின் கதை தனிச்சிறப்பைப் பெற்றிருப்பதாக விமர்சகர்களாலும் வாசகர்களாலும் போற்றப்பட்டு வருகிறது. இன்றைய தலைமுறைகளுக்கும் பொருந்திவரும் பார்வைகளையும் எண்ணவோட்டங்களையும் உள்ளடக்கியிருக்கும் இந்த நாவல் புதுக்கருக்கு குலையாமல் பொன்விழா காணும் இத்தருணம் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு பெருமிதம் அளிக்க்க்கூடியது. ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் ஒரு புளியமரத்தின் கதை தற்காலத் தமிழ் இலக்கியத்தின் சாதனைப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக விளங்குகிறது.
மற்ற இரு நாவல்களைப் போலல்லாமல், ஒரு புளியமரத்தின் கதையில் ஒரு புளியமரமே மையப் பாத்திரமாக இருக்கிறது. ஒரு சிற்றூரின் நாற்சந்தியில் கொப்பும் கிளையும் பழமுமாக செழித்திருக்கும் அந்த மரம் அவ்வூர் மக்களின் மாறிவரும் இயல்புகளுக்கும் குணாதிசயங்களுக்கும் சாட்சியாக விளங்குகிறது. பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த நாகர்கோவில்தான் அந்தச் சிற்றூர்; இந்திய துணைக்கண்ட்த்தின் தென்கோடியான குமரிமுனையிலிருந்து கூப்பிடு தூரத்தில் உள்ளது. நாவலின் கதையாடல் சென்ற நூற்றாண்டின் முப்பதுகளில் தொடங்கி ஐம்பதுகளின் நடுப்பகுதி வரை—அதாவது, மொழிவாரி மாநிலங்கள் சீரமைப்பின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுக்கு மாற்றப்படுவதற்கு சற்று முன்வரை—நீள்கிறது. திருவிதாங்கூர் சமஸ்தானப் பின்னணியில் நாகர்கோவில் மக்கள் பெரும்பாலும் தமிழ், மலையாளம் ஆகிய இருமொழிகளையும் பேசும் திறனுடையவர்களாக இருந்தார்கள். மக்கட்தொகையில் சரிபாதி இஸ்லாம், கிருத்துவம் ஆகிய சிறுபான்மை மதங்களைப் பின்பற்றுபவர்கள். இதுவே, நாகர்கோவில் எனும் ஊருக்கு ஒரு பிரத்யேக மணத்தை வழங்கியிருந்தது. வேளாண்மையே பிரதானத் தொழிலாக இருந்த இந்த நிலப்பரப்பில், பெரும்பான்மை இந்துக்கள் சாதி அடிப்படையில் பிளவுண்டிருந்தார்கள். இவர்களில் பெரும் நிலவுடமையாளர்களாக இருந்த தமிழ் வேளாளர்கள் சமூகத்தில் ஆதிக்கமும் செல்வாக்கும் உடையவர்களாக விளங்கினர். அந்த காலகட்ட்த்தில் பொதுவுடமை இயக்கமும் நாகர்கோவிலின் சுற்றுப்புறங்களில் தீவிரமாக இயங்கிவந்தது. ப ஜீவானந்தம், கிருஷ்ண பிள்ளை போன்ற தலைவர்கள் சிறு விவசாயிகளையும் வேளாண்மைத் தொழிலாளர்களையும் ஒன்றுகூட்டி தொழிற்சங்கம் அமைத்து உரிமைப் போராட்டங்களை முன்னெடுத்து வந்தார்கள்.
ஒரு புளியமரத்தின் கதை-யின் நாயகனான அந்தப் புளியமரம், ஒரு காலத்தில் எப்போதும் நீர் நிறைந்திருக்கும் குளம் ஒன்றின் நடுவில் உருவாகியிருந்த மேட்டுப் பகுதியில் உயர்ந்து நின்றது. புளியமரத்தின் தெற்கே சிறிது தொலைவில் ஒரு சவுக்குமரத் தோப்பு. வேலையற்றவர்கள் அந்த்த் தோப்பில் பகல்தூக்கம் போடச் செல்வது வழக்கம். அந்த காலகட்ட்த்தை சுரா நேசத்துடன் இப்படி விவரிக்கிறார்:
“அது தானாகப் பிறந்தது. தன்னையே நம்பி வளர்ந்தது. இலை விட்டது. பூ பூத்தது. காய் காயாகக் காய்த்ததில் இலைகள் மறைத்தன. பழுத்த இலைகள் உதிர்ந்து மண்ணை மறைத்தன. மண்ணை மறைத்து, மண்ணில் கரைந்து, பெற்ற தாய்க்கு வளங்கூட்டி, மீண்டும் மரத்தில் கலந்தன. வானத்தை நோக்கித் துழாவின கைகள். வேர்கள் மண்ணுக்குள் புகுந்து அலைந்தன. ஆமாம், சுயமரியாதையுடன் நிறைவாழ்வு வாழ்ந்த மரம் அது.”
இயற்கையின் நியதிகள் சார்ந்த அழகும் பொலிவும் உயிரோட்டமும் நிறைந்திருந்த அந்த புளியமரத்தை மனிதச் சமூகம் தன் அற்ப விளையாட்டில் பயணமாக வைத்து அழித்த கதைதான் சுரா என்ற இளைஞரின் இந்த முதல் நாவல்.
ஒரு புளியமரத்தின் கதையின் தொடக்கத்தில் நாம் அந்தப் புளியமரத்தை தாமோதர ஆசான் என்ற உள்ளூர் கதைசொல்லியின் மூலமாக அந்த வட்டாரத்தில் புழங்கும் நாட்டார் கதையின் ஒரு பகுதியாக எதிர்கொள்கிறோம். செல்லாயி என்ற இளம்பெண் காதலில் மனமுடைந்து அந்த புளியமரத்தில் தன்னையே தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொள்கிறாள். அந்த நிகழ்வுக்குப் பிறகு, தீய நோக்கம் கொண்ட சிலர் அது பேய்பிடித்த மரம் என்று அவதூறைக் கிளப்பிவிட்டு அந்த மரத்தை அடியோடு வெட்டிச் சாய்க்க முனைகிறார்கள். தாமோதர ஆசானின் சமயோசிதமும் தந்திரமும் நல்லூழாக புளியமரத்தை தீயவர்களின் சதியிலிருந்து காப்பாற்றி விடுகின்றன.
பின்னர், அந்த மரத்தைச் சுற்றி இருந்த குளத்தின் நீரின் முடைநாற்றம் அவ்வழியாக பயணப்பட்டிருந்த திருவிதாங்கூர் மகாராஜாவின் நாசியைத் தாக்குகிறது. அரசரின் கோபத்தின் விளைவாக ஒரே நாளில் நீர் குளத்திலிருந்து வெளியேற்றப்பட்டு அந்த பள்ளம் மண்ணால் நிரப்பப்படுகிறது. இந்த மாற்றத்தையொட்டி அந்த இடம் ஒரு சந்தையாகவும் பின்னாளில் ஒரு முச்சந்தியாகவும் உருவெடுக்கிறது. இந்தியா விடுதலையடைந்தவுடன், புளியமரத்தின் அருகே இருந்த சவுக்கந்தோப்பில் மரங்கள் அழிக்கப்பட்டு அந்த இடம் மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு நேரு காலத்துப் பூங்காவாக மாற்றப்படுகிறது. அங்கே நடுத்தரவகுப்பு குடிமக்கள் தினந்தோறும் வருகை தந்து உள்ளூர், உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் பிரச்சினைகளைப் பேசுகிறார்கள். அதே நேரத்தில் அங்கே மாட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கி மூலம் அகில இந்திய வானொலியின் ஒலிபரப்புகளை கேட்டுக்க்கொண்டிருப்பதும் வழக்கம்தான்.
இந்த சூழலில் புளியமரம் வாழ்வாங்கு வாழ்ந்ததா? அதனால் என்றைக்குமாக நிலைத்திருக்க முடிந்த்தா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த நிலையாமை நம் இனத்துடன் கூடப்பிறந்த அவப்பேறு. தன் அசைவால் காற்று வீசச் செய்தும், அண்டியோர்க்கு நிழல் கொடுத்தும், ஒவ்வொரு கோடையும் கொத்துக் கொத்தாக எண்ணற்ற பழங்களை வழங்கியும் மக்களுக்கு நன்மைகளை அளித்துகொண்டிருந்தது அந்த புளியமரம். ஆனால் அந்த மரத்தைச் சுற்றியிருந்த மனிதக்கூட்டத்தின் இயல்பே வேறுவிதமாக இருந்தது. எனவே, புளியமரம் மனித இனத்தின் அழிவூட்டும் ஆசைகளுக்கும் கயமைகளுக்கும் எத்தனங்களுக்கும் பலியாக வேண்டியிருந்தது. சுருங்கச் சொன்னால்,”புளியமரம் வாழ்ந்து அழிந்த கதைதான்” ஒரு புளியமரத்தின் கதை.
நகராட்சி மன்றம், சில்லறை வணிகம், தேர்தல், செய்திப் பத்திரிகை போன்ற நவீன யுகத்தின் நிறுவனங்களுடன், ஓரு சிற்றூரில் வாழும் மரபார்ந்த மக்கட்குழு எப்படியெல்லாம் உறவாடி அவற்றை எதிர்கொண்டு தம் வாழ்க்கையின் தேவைகளுக்கேற்ப மாற்றிச் சிதைக்கிறது என்பதைப் பற்றிய கதையாடல்தான் இந்த நாவல் என்றும் கொள்ளலாம். மசக்கை கொண்டிருக்கும் இளம்பெண்ணின் புளியங்காய் தின்னும் ஆசையால் புளியமரத்தின் அறுவடையை நகராட்சி ஏலம் விடுவது தடைப்படுகிறது. இதனால் நகரிலிருக்கும் வெவ்வேறு அரசியல் பிரிவுகளினூடே பகை மூள்கிறது. புளிமேடைக்கருகே உள்ள கடையொன்றின் நியான் விளக்கு மர்மமான வழியில் உடைவதற்குப் பின்னே அதிகார வேட்டை, பேராசை, வணிகப் போட்டி, தகிடுத்த்தங்கள், தீராப் பகை இவற்றால் நிரம்பிய பின்கதை செயல்படுகிறது. நாவலின் கடைசிப் பகுதியில் தேர்தலில் பயன்படும் மதவாதக் கணக்கீடுகள், தனிமனிதப் பகை அரசியலுக்கு நீளும் அவலம், ஒரு இந்து அம்மனின் உறைவிடமாக புளியமரத்தின் மீது திணிக்கப்படும் போலிப் புனிதம், இப்போட்டியில் பாதரசம் கலந்து புளியமரம் அழிக்கப்படுவது ஆகியவற்றை நாம் காண்கிறோம்.
ஒரு புளியமரத்தின் கதையை சொல்லும் விதமாக சுரா ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் கூட்ட்த்தின் கதையையும் நமக்கு உணர்த்திச் செல்கிறார். அந்த மனிதர்களின் வாழ்முறையையும், குணாதிசயங்களையும் போக்குகளையும் மட்டும் அவர் விவரிக்கவில்லை; அவர்களின் செயல்திறனையும் சாதுர்யத்தையும் லௌகீக அபிலாட்சைகளையும் கூடவே எடுத்தியம்புகிறார். நம் மக்களாட்சியின் மகத்தான நிறுவன்ங்கள் எப்படி ஒவ்வொரு குடிமகனின் வரலாற்றுச் சுமைகளின் பெயராலும் அற்ப காரணங்களுக்காக சிதைக்கப்பட்டு சீரழிக்கப்படுகின்றன என்ற விவரணை, ஊழலும் வன்முறையும் நிரம்பியிருக்கும் நம் இன்றைய நிலமையை முன்னறிவிப்பதாக இருக்கிறது.
“முச்சந்திக்கு வந்து சேர்பவர்களுக்கும் சரி, அல்லது சந்தர்ப்பவசமாய் அந்த இட்த்தைத் தாண்டிச் செல்பவர்களுக்கும் சரி, அவர்கள் எங்களூரைச் சேர்ந்தவர்கள் எனில் ஒரு சந்தர்ப்பத்திலில்லாவிட்டால் மற்றொரு சந்தர்ப்பத்தில், ‘இந்தப் புளியமரம் அழிந்து போகக் காரணம் என்ன’ என்ற கேள்வி மனசில் முளைக்கத்தான் செய்யும். ...தன்னுடைய ஆத்மா உவந்தேற்றுக்கொள்ளும் விடை ஒன்றை [அந்த உள்ளம்] கண்டுபிடித்துவிடுமா? கடவுளுக்குத்தான் வெளிச்சம். அப்படியே ஒரு விடையைக் கண்டுபிடிக்கமுடியாமல் போனால் என்ன, குடி முழுகியா போய்விடும். ஒரு உண்மையான கேள்வி பிறந்துவிட்டாலே போதும். ஆயிரம் விடைகளுக்குச் சமானம் அது.”
சுரா-வின் பார்வையும் மொழிநடையும்தான் ஒரு புளியமரத்தின் கதை நாவலுக்கு தனிச் சிறப்பை அளிக்கின்றன. இந்திய விடுதலைக்குப் பின் எழுதவந்த தமிழ் எழுத்தாளர்களில் சுரா தனித்துவமான நடையைக் கொண்டிருந்தார். தன் முதல் நாவலான புளியமரத்தின் கதையில் சுற்றி நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளின்மீது அங்கதமான பார்வையைச் செலுத்தும் இளவயது கதைசொல்லியாக தன்னை உருமாற்றிக் கொள்கிறார். சுராவைப் போலவே, இந்த இளைஞனும் மிகத் துயரமான தருணங்களிலும் அவற்றின் நகைச்சுவை சாத்தியங்களைக் கண்டெடுப்பவனாக இருக்கிறான். தன் இலக்கிய முன்னோடியாகவும் தமிழ் சமூகத்தின் பலவீனங்களின் மீதும் பாசாங்குகளின் மீதும் கணை தொடுப்பவராகவும் விளங்கிய புதுமைப்பித்தனின் பாணியில் சுரா மனிதர்களையும் அவர்களின் சூழ்நிலைகளையும் தயக்கமோ தாட்சண்யமோ இன்றி விவரிப்பதில் பிடிவாதமாக இருக்கிறார். அவருடைய விவரணையில் மிகவும் கந்தறகோளமான நிகழ்வுகளாயிருப்பினும் அவை ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட மனிதக்கூட்டத்தில் இயல்பாக எழுக்கூடியவைதான் என்ற உணர்வைத் தருவது வியப்புக்குரியது.
அதுவும், எப்படிப்பட்ட மனிதக் கூட்டம்! தன் இளமைப் பருவத்தில் பொதுவுடமை இயக்கத்தோடு நெருக்கமான தொடர்புடையவராக இருந்த சுரா செல்வந்தர்களையும் அதிகாரத் திமிர் பிடித்தவர்களையும் பற்றி எழுதும் அதே ஈடுபாட்டுடன் ஏழை, எளிய மக்களைப் பற்றியும் எழுதுகிறார். அரசியல்வாதியாக மாறும் வணிகரையும், முகவர்களாக மாறும் செய்தி நிருபர்களையும், ஊதியம் கொடுப்பவனுக்கே துரோகம் செய்யும் அடியாட்களையும், தேர்தெடுக்கபட்டாலும் என்றுமே வெற்றி பெறமுடியாத கடலைத் தாத்தா போன்ற டம்மி வேட்பாளர்களையும் சித்தரிக்கும்போது அவர் ஒரு தீர்க்கதரிசி என்ற எண்ணம் வராமல் போகாது.
தலபுராணங்களின் பல அடையாளக் குறிகள் ஒரு புளியமரத்தின் கதை-யில் உண்டு. பேய் பிடித்திருக்கும் மரம், ஒரு அரசனின் கணநேர அதிருப்தியால் மேடாக்கப்படும் குளம், காய்த்துத் தொங்கும் அறுவடைப் பருவத்தில் புளியம்பிஞ்சுகள் மரத்திலிருந்து முற்றிலும் காணாமல் போகும் மாயம், தீய மனிதர்கள் ஒருவர் மற்றவர்க்கெதிராகவும் அனைவரும் கடவுளுக்கெதிராகவும் மேற்கொள்ளும் சூழ்ச்சிகள், விதிவசத்தால் மரத்தின் மீது தெய்வீகம் சுமத்தப்படுவது, புளிய மரத்தின் திடீர் அழிவு போன்ற அடையாளக் குறிகளும் சுராவின் நயமான கதைசொல்லும் பாணியும்தான் புளியமரத்தின் கதையை நாம் வாழும் காலத்தின் மறக்கமுடியாத உருவகமாக மாற்றியிருக்கின்றன. ஒரு கலைஞனின் ஊடுருவும் பார்வையும் குறும்பான தொனியும் தமிழ் இலக்கியத்துக்குத் தந்திருக்கும் கொடை இந்த நாவல்.
ஒரு புளியமரத்தின் கதை-க்குப் பிறகு சுரா சமூகத்தின் ஒழுங்குக்கெதிராக கிளர்ந்தெழும் ஒரு கலைஞனின் பாத்திரத்தையும் அவனுக்கு நேரும் இக்கட்டையும் ஜேஜே: சில குறிப்புகள்-இல் அலசினார். குடும்ப உறவுகளின் தன்மையையும் இயல்பையும் பற்றிய கேள்வியெழுப்பல்தான் அவருடைய மூன்றாவது நாவலான குழந்தைகள், பெண்கள்,,ஆண்கள்.
ஆச்சரியமும் கூரிய பார்வையும் தாராள மனமும் கொண்ட ஒரு இளைஞன் தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் மேற்கொண்ட ஈடுபாட்டின் விளைபொருளாக சுரா-வின் முதல் நாவல் காலத்தை வென்று நிலைத்திருக்கிறது; வருங்காலத்திலும் நிலைத்திருக்கும். ஒரு புளியமரத்தின் கதை நாவலின் பாத்திரங்கள் அடிக்கடி சுராவின் எழுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளில் மீண்டும் தோன்ற்றமளிப்பதில் வியப்பொன்றுமில்லை. நாவலில் இருப்பதைப் போலவே அக்கதைகளிலும் அவர்கள் நவீனத்துவத்தை எதிர்கொள்ளும் போராட்ட்த்தில் தங்களுடைய இயல்பான உயிரோட்ட்த்தின் வல்லமையையும் வளப்பத்தையும் இழந்துவிடாமல் ஈடுபட்டிருப்பார்கள். எப்பொழுதும்போல, சுராவின் கலையில் பொதிந்திருக்கும் மகத்தானதும் அதே நேரத்தில் அடக்கமான பிரயத்தனம் ஒன்றே: அதாவது, ஒரு உண்மையான கேள்வியை எழுப்புவது.
ந. கல்யாணராமன்
18 நவம்பர் 2015
சென்னை
Comments